Saturday, February 6, 2016

தகுதித் தேர்வை பூர்த்தி செய்யாத பள்ளி ஆசிரியருக்கும் சம்பளம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

'தகுதித் தேர்வை பூர்த்தி செய்யாவிட்டாலும், உச்சநீதிமன்ற வழக்கு முடிவுக்கு வரும்வரை, சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியருக்கு, சம்பளம் வழங்க வேண்டும்,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது
.
துாத்துக்குடி மேலதட்டப்பாறையில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் டி.என்.டி.டி.ஏ., துவக்கப் பள்ளி உள்ளது. இடைநிலை ஆசிரியராக 2012 ஆக.,2 ல் எஸ்தர் நியமிக்கப்பட்டார். இதை அங்கீகரிக்கக் கோரி கல்வித்துறைக்கு, பள்ளி நிர்வாகம் விண்ணப்பித்தது.
'ஆசிரியர் தகுதித் தேர்வில் எஸ்தர் தேர்ச்சி பெறாததால், நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது,' என கல்வி அதிகாரிகள் நிராகரித்தனர். எஸ்தர் மற்றும் பள்ளி தாளாளர், 'பணி நியமனத்தை தற்காலிகமாக அங்கீகரித்து, சம்பளம் வழங்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதை அனுமதித்து ஜன.,4 ல் தனிநீதிபதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர், துவக்கக் கல்வி இயக்குனர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுதகுதித் தேர்வை, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தகுதியாக நிர்ணயித்துள்ளது. இதில் அரசு தலையிட முடியாது.
சிறுபான்மையினர் பள்ளி, சிறுபான்மையினர் அல்லாத பள்ளி என கல்வித் தகுதியை வேறுபடுத்தி பார்க்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டனர்.
நீதிபதிகள் சதீஷ் கே.அக்னி கோத்ரி, எஸ்.மணிக்குமார் கொண்ட அமர்வு விசாரித்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் சண்முகநாதன், பள்ளி நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் ஐசக்மோகன்லால் ஆஜராயினர்.
நீதிபதிகள் : 'இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது,' என அரசு வழக்கறிஞர் கூறுகிறார். அது முடிவுக்கு வரும்வரை, பணியாற்றும் காலத்திற்குரிய சம்பளத்தை, ஆசிரியருக்கு வழங்க வேண்டும். பணியை விட்டு நீக்கக்கூடாது. பணியில் தொடர்வது என்பது, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என்றனர். இதுபோல் தாக்கலான பல்வேறு வழக்குகளில் மனுதாரர், எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment